மருவிய மா ரெக லே...





பல நூற்றாண்டு முன்பின்
பாத்திமா கதையிது
கால கால்களின் இடுக்கில்
மெதுமெதுவாய் மிதிபட்டு
புதைந்து புதிதாய்
"மரக்கலே" எனும்
மரக்கலமாக முளைவிட்ட
கதையிது

கடல் கடந்து
வளம் சுரண்ட வந்த
போர்த்துக்கேயரின்
பசித்த வாளுக்கு
இரண்டாம் இராஜசிங்கனை
இரையாக்கி
இலங்கையை அடைந்து
அள்ளிச்சுருட்ட
வெறியோடு மன்னனை
வெட்டிவீச துரத்த

ஊவாவில் ஒரு ஊரில்
முக்காடிட்ட பாத்திமாவின்
மனை வளவில் வளர்ந்த
பலாவின் பொந்தில்
பதுங்கிக் கொண்டான்

வேட்டைக்காய் வந்த
போர்த்துக்கேய வீரர்கள்
அகோரமாய் அதட்டியும்
அம்மணி வாயோ
அவனிருந்த இடம்
பகரவில்லை

எரிச்சலுற்ற வெறி நாய்கள்
கண்டதுண்டமாய்
வெட்டி சாய்த்து
சென்றன
இரத்த வெள்ளத்தில்
மூழ்கிக்கிடந்த
மூதாட்டியை
பொந்திலிருந்து
வெளிவந்த
அம்மன்னன் அள்ளியெடுத்து
அவள் இரத்தம்
தொட்டு பார்த்து
நன்றியோடு
சொன்ன வார்த்தை
மா ரெக லே......
(என்னைக் காத்த இரத்தம்)

அவள் உயிருக்கு உயிலாய்
தந்த ஊர்
பங்கர கமன..

ஆனால் இன்றோ
மரக்கலத்தில் வந்தால்
மரக்கலேயாவாம்
மறைந்த வரலாரோடு
காற்றில் கரைந்துவிட்டது
பாத்திமாவின் தியாகமும்....
2018/09/28
புத்தளக்கவி
    நிஸ்னி

Comments

Popular posts from this blog

வீழ்வேனென்று நினைத்தாயோ

உனக்காகவே உயிர் வாழ்கிறேன்